சென்னை: நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை இன்று (செப்.25) முன்கூட்டியே வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கி வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அக்டோபர் தொடக்கத்தில் விடுமுறை நாட்களும் வருவதால், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பில்கள் மற்றும் பட்டியல்களைத் தயாரித்து இன்று பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் துறை தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கெனவே தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம், ஓய்வூதியத்தை செப்டம்பர் 25-ஆம் தேதியே வழங்க முடிவு செய்துள்ளது.





















