சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ஆம் தேதியுடனும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதியுடனும் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
மேலும், விடுமுறை காலத்தில் மாணவர்களை பள்ளி சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் அல்லது சுற்றுலா நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.





















