சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி திறக்கப்பட்ட நிலையில், பின்னர் 4,000 கனஅடியாகவும், தொடர்ந்து 7,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது. நேற்று மாலை நீர்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் 12,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதாலும், கடைமடை பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதாலும் நீர்திறப்பை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நீர்வளத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் 92.37 அடி அளவில் உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 9,512 கனஅடியாக பதிவாகியுள்ளது. நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டத்தில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.





















