சேலம்,
சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்ற பொழுது ஏதாவது நடந்து விடுமோ என்ற அச்சத்தில் எழுகிறேன் என்று சொல்கிறார். அப்படி என்றால் ஸ்டாலினுடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. ஏனென்றால் ஸ்டாலின் அவருடைய கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்.
ஏனென்றால் தினந்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வருகின்ற செய்தியை தி.மு.க.வினர் பண்ணுகின்ற பிரச்சினை, இந்த தலைவலி, இந்த செய்திகளை பார்த்து, பயந்து, நடுங்கி காலையில் எழுகின்ற பொழுது, ஸ்டாலின் கண் விழிக்கின்ற பொழுது, எதுவுமே நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு விழிக்கிறேன் என்று அவரே கொடுத்த வாக்குமூலம்.
இவருடைய ஆட்சியில் எதை சந்தித்து இருக்கின்றார்.
வறட்சியை சந்தித்து இருக்கின்றாரா? அல்லது மழை காலத்திலே, வெள்ளம் வந்த பொழுது சந்தித்துள்ளாரா. புயல் வந்த பொழுது அந்த புயலுக்கு மேலாக நாம் மக்களுக்கு நிவாரணம் கொடுத்தோம். அப்பேர்பட்ட புயலை சந்தித்தாரா?
அல்லது கொரோனா வைரஸ் முதன்முதலாக தமிழகத்தில் வந்த பொழுது கடுமையான பாதிப்பு அதை எதிர்கொண்டாரா? ஒன்றுமே செய்யாமல் கண் விழிக்கின்ற பொழுது அவருடைய கட்சிக்காரர்களிடமிருந்து பயப்படுகின்ற நிலைமைக்கு முதலமைச்சர் ஸடாலின் சென்று விட்டார்.
இரண்டு மாதத்திற்கு முன் என்ன பேசினார். ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்திற்கு பிறகு முதலமைச்சராக இருக்கும்போது ஸ்டாலின் பேசினார். நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சொன்னார். ஒழுக்கமாக கட்சியில் பணி செய்யாவிட்டால், யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன்.
கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன அதே ஸ்டாலின் இன்றைக்கு கெஞ்சுகின்ற நிலையை பார்க்கின்றோம். ஆக திறமையில்லாத முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.


















