சேலம்
மக்கள் இந்த ஆட்சியில் இன்றைக்கு துன்பங்களையும், வேதனைகளையும் தான் அனுபவித்து வரும் தான் சூழ்நிலையில் இருக்கிறது. தி.மு.க. அரசு மீது கொதித்து போய் இருக்கிறார்கள் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி :- அ.தி.மு.க. உங்கள் தலைமையில் சிறப்பாக செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் சொல்லுகின்றனர்.
பதில் :- சொல்கிறார்கள் என்று இல்லை, நடந்து கொண்டிருக்கிறது சிறப்பாக உள்ளது. ஊடகங்களிலும், பத்திரிகையிலுமே வரும் செய்திகள் இதற்கு சாட்சி. இன்றைக்கு அண்மையில் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பான எழுச்சியான கூட்டம் நடைபெற்றது,
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் இந்த விடியா தி.மு.க. அரசு ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், முக்கியமான வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மக்கள் கொதித்துப்போயுள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகாலம் கொரோனா வைரஸ் தொற்று இருந்த காலம் கடுமையான காலம், வேலை இல்லாமல் பொருளாதாரம் இழந்து, வாழ்வதற்கே ஒரு சவாலான இந்த சூழ்நிலையில் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு முதலமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார். சுமார் 53 சதவீதம் வரை உயர்த்தி உள்ளார். சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். கடைகளுக்கு 150 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார்கள். வீட்டுவரி உயர்த்தி உள்ளார்கள்.
இதையெல்லாம் எப்படி மக்கள் தாங்கிக்கொள்ள முடியும். இன்றைக்கு படிப்படியாக இயல்பு நிலைக்கு இருக்கின்ற பொழுது அதற்கு ஏற்றவாறு, அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு அரசாங்கம் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆக மக்கள் இந்த ஆட்சியில் இன்றைக்கு துன்பமும் வேதனையும் தான் பார்க்கக்கூடிய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியும். ஏன் நீங்களும் கூட துன்பமும் வேதனையும்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நிம்மதியாக இருக்கிறீர்களா கிடையாதே? நீங்களும் கரண்ட் பில் கட்டியாக வேண்டும். நீங்களும் வீட்டுவரி கட்டியாக வேண்டும். ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்கள் உண்மை செய்தியை வெளியிடுங்கள்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


















