சென்னை
ஓசி பயணம் என்று பெண்மையை அவமானப்படுத்தி விட்டார் அமைச்சர் பொன்முடி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி : பெண்கள் பேருந்தில் செல்வதை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே.
பதில் : இது பெண்மையை அவமானப்படுத்துகின்ற விஷயமாகத்தான் இதனை நாம் பார்க்க முடியும். பொதுவாகவே இந்த திமுக அமைச்சர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள், நிலச்சுவான்தாரர்கள், பண்ணையார்கள், குறு நில மன்னர்கள் போல தன்னை நினைத்துக்கொள்கிறார்கள். இறுதி எஜமானர்கள் யார். மக்கள் தான். நீங்கள் தேர்தலை சந்திக்க வேண்டுமல்லவா.
இவர்கள் பதவிக்கு வந்தவுடன் என்ன தோரணை. கால் மீது கால் மேல் போட்டு உட்கார்ந்து கொள்வது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சினிமாவில் வருவது போல உள்ளது. ஆந்திர திரைப்படங்களில் பார்க்கும் அமைச்சரை போல இருக்கிறார்.
தலித் சமுதாயத்தை சேர்ந்த எம்பியை அவரை நிற் கவைத்து பேசுகிறார். குறவர் இனத்தைச் சேர்ந்த பிரதநிதியை கிட்டே வராதே போ என்று சொல்லி விட்டு, அந்த இனத்தையே இழிவுபடுத்தி, தலித் மக்களை அவமானப்படுத்தும் விஷயம் இது. அமைச்சர் பொன்முடி வரிசையாக என்ன என்ன செய்திருப்பார் என்று பார்த்திருப்பீர்கள்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எப்படி நடந்து கொண்டார் என்று அனைவருக்கும் தெரியும். கடுமையாக நடந்து கொண்டார். எப்படி இதுபோன்று இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. அதுபோல ஒரு விழாவில் வெளிப்படையாக நீங்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்று சொல்கிறார். எல்லோரும் இருக்கும் இடத்தில் ஒரு பட்டியலினத்தவரை அவமானப்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்கிறார்.
சட்டமன்றத்தில் யோவ் உட்காருய்யா என்கிறார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.தொடர்ந்து மன்னர்கள் போல இருப்பார்கள் என்று இவர்களுக்கு நினைப்பு. நினைப்பு தான் பொளப்பை கெடுக்கிறது என்பார்கள். பெண்கள் பயணம் செய்கிறார்கள்.
இவர்கள் அப்பன் வீட்டு காசையா கொடுக்கிறார்கள். அரசு பணத்தில் செல்வதை நீங்கள் எப்படி இப்படி சொல்வீர்கள். ஓசி பயணம் என்றால் பெண்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். இவை அனைத்திற்கும் ஜனநாயக ரீதியில் பதிலடி அளிப்பதற்கு தேர்தல் வரும்போது அதன் தாக்கம் இருக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


















