திண்டுக்கல்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை வகித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மலர்கொடி அம்மையப்பன் வரவேற்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் கோவை புரட்சித்தம்பி, தீப்பொறி அய்யாசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னம்பட்டி பழனிசாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் டி.சி.ராஜ்மோகன் ஆகியோர் பேசினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-
மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வார்கள். மக்களின் உணர்வை கண்ட டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எடப்பாடியார் தான் கழகத்தின் தலைவர், அவரிடம் தான் தலைமை கழகம் இருக்க வேண்டும். அவரிடம் தான் கழகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை என தமிழக மக்களால் உணர்ந்திருக்கின்ற எண்ணத்தை நீதியரசர்கள் வழங்கி உள்ளனர்.
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் இருந்த மாபெரும் பொறுப்பான பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கூடியுள்ளனர்.
1972ல் கழகத்தின் சாதாரணமாக தொண்டனாக இருந்தேன். முன்னதாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராக இருந்தார். புரட்சித்தலைவி அம்மா எனக்கு பொருளாளர் பதவியை வழங்கினார். தற்போது எடப்பாடியார் அந்த பதவியை எனக்கு வழங்கியுள்ளார்.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதை போல அந்த பதவியால் மரியாதை கூடுமே தவிர, தனிப்பட்ட சீனிவாசனுக்கு கிடையாது. அந்தப்பெருமை எல்லாம் பொதுமக்களையும், கழக தொண்டனையும் சாரும்.
கழக ஆட்சியில் செய்த பணிகளை திமுகவினர் மறுக்க முடியுமா? வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் எண்ணற்ற பணிகள் கழக ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்டன. அதனை மறுத்து பேச திமுகவினர் தயாரா? மேடை போட்டு சொல்லட்டும். 525 பொய்யான வாக்குறுதிகளை அளித்தது போல் தான் திமுகவினர் பதில் கூற முடியும். வேறு எந்த சாதனையையும் கடந்த ஒன்றரை வருடத்தில் ஸ்டாலின் எதையும் செய்யவில்லை.
37 அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினால் இவரால் போட்டோவிற்கு போஸ் கொடுக்க முடியாது. ஆனால் கழக ஆட்சியின் போது நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்தவர் எடப்பாடியார்.
அதனால் தான் கழகத்திற்கு 63 எம்.எல்.ஏ.க்கள் கழக கூட்டணி கட்சியினருக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் என 75 எம்.எல்.ஏ.க்களை தனியாக பெற்றுள்ளார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பிறகு தனி பெரும் வெற்றியை பெற்ற பெருமை எடப்பாடியாரையே சாரும்.
ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து, சொத்து வரி உயர்வை கண்டித்து, செயலற்ற தன்மையை கண்டித்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என எடப்பாடியார் உத்தரவிட்டதன் பேரில் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதன் பெருமை எடப்பாடியாரையே சாரும். திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை குழல் துப்பாக்கியாக இரண்டு மாவட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது.
இன்றைய தினம் சிலர் நமது கழகத்தின் தலைவர் தாங்கள் தான் என கோர்ட்டுக்கு செல்கின்றனர். அரசியல் ஆண்மை இருந்தால் எங்களை எதிர்ப்பவர்கள், கழகம் எங்களுக்கு தான் சொந்தம் என்று செய்தி பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் ஊளையிடுகின்றவர்கள் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட வேண்டியது தானே?
பிரசவ வலி என்பது பெற்ற தாய்க்கு தான் தெரியும். அதேபோல் கடந்த 50 வருடங்களாக கழகத்தை கட்டி காத்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். தலைமைக்கழகத்தை பிடிப்போம் என ரோட்டில் போவார் வருவோர் எல்லாம் பேசுகின்றனர். சிலர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இதுபோன்று செயல்படுகின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழங்கிய இல்லமான ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நாங்கள் உள்ளோம்.
நாங்கள் விலை போனதாக குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் யாருக்கு விலை போக வேண்டும்? கழக ரீதியாக 75 மாவட்ட செயலாளர்களில் ஐந்து பேரை தவிர 70பேர் எடப்பாடியாரை ஆதரிக்கின்றனர். 63 எம்எல்ஏக்களில் நான்கு பேரை தவிர 59 எம்எல்ஏக்கள் எடப்பாடியாரை ஆதரிக்கின்றனர். அதைப்போல 2692 பொதுக்குழு உறுப்பினர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் எடப்பாடியாரை ஆதரிக்கின்றனர்.
நமக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களே அல்ல என்பதும், புடம் போட்ட தங்கங்களாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடியாரை ஆதரிக்கின்றனர் என்பதையும் நீதி அரசர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கட்சி பிரச்சினையை பொதுக்குழுவில் பேச வேண்டியது தானே? எதற்காக எழுந்து சென்றீர்கள். பொதுக்குழுவிற்கு முன்னதாக இரட்டை தலைமை வேண்டாம் என கழக நிர்வாகிகள் வலியுறுத்தினோம். இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியாது. பொது செயலாளர் ஒருவர் தான் இருக்க வேண்டும் என அனைவரும் கூறினோம்.
புரட்சித்தலைவரை போல் புரட்சித்தலைவி அம்மாவைப் போல் சிங்கமாக ஒரே தலைவர் வேண்டும் என அனைவரும் கூறினர். இதனை நான்கு பேர் தான் எதிர்த்தனர். ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியோடு உச்சநீதிமன்றம் எடப்பாடியார் தலைமையில் தான் கழகம் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
1967 முதல் 1972 வரை ஐந்து வருடத்தில் திமுகவினர் ஊழல் செய்துள்ளீர்கள் என புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குற்றம் சாட்டினார். அதனால் கருணாநிதி அவரை நீக்கினார். பொன். சீனிவாசன் மதுரை முத்து போன்றோர் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு ஜால்ரா அடித்தனர். அப்பொழுதே புரட்சித்தலைவர் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு தொண்டர்களாலே தேர்வு செய்ய வேண்டும் என அறிவித்தார்.
அதே சட்ட திட்டத்தை தான் எடப்பாடியார் கொண்டு வந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது? அரசியல் ஆண்மை உள்ளவர்கள் போட்டி போட வேண்டியது தானே? மக்களின் ஆதரவால் ஜெயித்து வர வேண்டியது தானே? கழகத்தின் பெரும்பாலானோர் அந்த பதவிக்கு தகுதியான ஒரே ஆண் சிங்கம் எடப்பாடியார் தான் என கூறினோம்.
கழகத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். ஆனால் நூற்றுக்கு நூறு சதவீதம் எடப்பாடியாருக்கு தான் ஆதரவு உள்ளது. ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். தனிமனிதரை நம்பி கட்சி கிடையாது. திண்டுக்கல் சீனிவாசன் என்றால் கழகத்தில் இருப்பதால் தான் மரியாதை. என்னால் தான் கட்சி திண்டுக்கலில் இருக்கிறது என கூற முடியுமா? சிலர் மண் குதிரையை நம்பி ஏமாந்து வருகின்றனர்.
எதிரிகளுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. அதனால் ஸ்டாலினுடன் கைகோர்த்து வருகின்றனர். அவர்கள் நம்மை பார்த்து சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கருடா சவுக்கியமா என்பதை போல் கேட்கின்றனர். அந்த பாம்புக்கு ஒரு நாள் ஆபத்து வரும் போது தான் தெரிய வரும் தாம் தவறு செய்து விட்டோம் என்பதை.
திமுக 525 வாக்குறுதிகளை அளித்தனர். அதில் சிறு குறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, மின்சாரம் சம்பந்தப்பட்ட கட்டணம், பேருந்து கட்டணம் சீரமைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம். பால் விலையை குறைப்போம். இவை அனைத்தையும் நிறைவேற்றினார்களா?
உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் வெற்றிபெற்ற பின்னர் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதே முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார் ஆனால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை ஏன் பேனா கிடைக்கவில்லையா? இல்லை மை இல்லாமல் போய் விட்டதா? ஒன்றரை வருட காலத்தில் என்ன செய்தீர்கள்? உங்களது வாக்குறுதிகளை நம்பி ஏராளமான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர். ஏமாற்று வேலைக்கு ஒரு அளவு வேண்டாமா?.
கழக ஆட்சியின் போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. 100 நாள் வேலை திட்டமும் அளிக்கவில்லை. ரூ 300 பணமும் வழங்கவில்லை. மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் கழக ஆட்சியின் போது 200 யூனிட் மின்சாரம் ரூ.170க்கு வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 300 யூனிட் பயன்படுத்துவர்கள் கழக ஆட்சியில் ரூ.530ம் திமுக ஆட்சியில் ரூ.675 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவார்கள் கழக ஆட்சியின் போது ரூ.830 ஆக இருந்ததை திமுக ஆட்சியில் ரூ.1125 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 900 யூனிட் வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வால் 2.31 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடியே 31லட்சம் சாமானிய மக்கள் ஆவார்கள். மின் கட்டண உயர்வால் அரசுக்கு வருவாய் ரூ.59,435 கோடி ஆகும் மேலும் ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப் போகிறார்களாம். இன்னும் ஐந்து வருடங்களுக்கு பின் மின் கட்டண உயர்வு 82 சதவீதம அதிகரிக்கும்.
மின்சார கட்டணம் குறித்து மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. மத்திய பிரதேசத்தில் ரூ 21,000 கோடி மானியமாக மக்களுக்கு வழங்கியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 61 லட்சம் மக்களுக்கு இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் ரூ.15845 கோடி மானியமாக மக்களுக்கு வழங்கியுள்ளனர். மற்ற மாநிலத்தோடு ஏன் செந்தில் பாலாஜி ஒப்பிட வேண்டும்? ஒன்றரை வருடத்திற்கு முன்பாக இருந்த எடப்பாடியார் அரசோடு ஒப்பிட வேண்டியது தானே. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியாரின் ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தவே இல்லை.
மேலும் வீட்டு வரி, சொத்து வரி என உயர்த்தி உள்ளனர். சாதாரண ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கலாமா? அதேபோல் பெட்ரோலுக்கு ரூ 3 மட்டுமே குறைத்துள்ளனர். டீசல் விலையை குறைக்கவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 தருவேன் என்றார்களே கொடுத்தார்களா? 55 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
அதனை திமுக அரசு நிறுத்தி விட்டது. பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி விட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. தமிழக மக்களுக்காக பார்த்து பார்த்து நலத்திட்டங்களை வழங்கிய பெருமை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மாவையே சாரும்.
ஸ்டாலின் புதிதாக கண்டுபிடித்துள்ள நாடகம் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டமாம். 1983லேயே சத்துணவு கண்ட சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்காக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீ இடஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடியார்.
இதனை எதிர்க்கட்சிகள் யாரும் கேட்கவில்லை. எடப்பாடியாரின் சிந்தனையில் உதயமானது. மேலும் அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே இருக்கும் என துணிவான அறிவிப்பை அறிவித்தவர் எடப்பாடியார். அதனால் தான் 75 எம்எல்ஏக்கள் கழகத்தின் கூட்டணிக்கு கிடைத்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்து சகோதரர்களை இழிவாக பேசியுள்ளார். இது ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா? இதுவரை ராசாவை ஏன் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. பெண்களை தரக்குறைவாக இழிவாக பேசலாமா? இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அதிமுக ஆட்சியில் நடந்ததா?
ரூ.80 கோடி மதிப்பீட்டில் கருணாநிதி நினைவிடத்தில் பேனா வைப்பதற்காக அரசு பணத்தில் இருந்து செலவு செய்யப் போகிறார்களாம்? ஏன் திமுக கட்சி பணத்தை வைத்து செலவிட வேண்டியது தானே?. காவல்துறை ஏவல் துறையாக மாறி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தினால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஒழிப்பதற்காக எடப்பாடியார் ஆட்சியில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு தடையணையை பெற்று விட்டனர். அடுத்து வந்த திமுக ஆட்சியில் இதனை தடுப்பதற்காக குழு போடுகிறார்களாம். திமுக ஆட்சியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 157 கொலைகள் நடந்துள்ளன. திமுக வட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு தெரியாமல் காவல்துறையினர் வழக்கு போட முடியாது.
கடந்த தேர்தலின் போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 45 இடங்களில் கழகம் தழுவியது. மூன்று சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை இழந்தது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடியாருக்கு தொடர்ந்து தமிழக மக்கள் நல் ஆதரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு கழக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.
.


















