சென்னை
கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: கொடநாடு விவகாரத்தில் தொடர்ந்து கொலை குற்றவாளி என்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறார்களே?
பதில்: இதற்கு எடப்பாடியாரே பதில் சொல்லி விட்டார். நானும் பதில் சொல்லிவிட்டேன். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை உடனடியாக எடுத்து விட்டோம். குற்றம் நடந்த உடனே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தினோம்.
ஆனால் அவர்களை தி.மு.க. தானே ஜாமீனில் எடுத்தது. இதை ஏன் அவர்கள் சொல்லாமல் இருக்கிறார்? அவர்களை ஜாமீனில் எடுத்ததன் மூலம் தி.மு.க. சட்டம் ஒழுங்கு சீற்கேட்டிற்கு துணை போவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த கொடநாடு விஷயமாக பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் எடுபடாது.
கேள்வி: திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்களே?
பதில்: இவற்றையெல்லாம் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது எங்களுக்கு. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும். இதற்கெல்லாம் பயப்படுகிற கட்சி இல்லை கழகம். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக கருணாநிதி குடும்பம் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் கருணாநிதி எப்படி இருந்தார். சன் டி.வி., உட்பட ஏகப்பட்ட சேனல்களை தற்போது நடத்தி வருகிறார்கள்.
அதோடு இப்போது சினிமா துறை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் தமிழகத்தையே கபளீகரம் செய்துள்ளார்கள். 13 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாங்கள் நிரபராதி என்பதனை நிரூபிக்க வேண்டியது தானே? ஆனால் அதை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.
மேலும் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவார்கள் தான் இன்றைக்கு கேபினட் அமைச்சராக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் கூடிய வரைவில் வரும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையை தனது ஏவல் துறையாக தி.மு.க. வைத்திருப்பதனால் தான் குற்றச்செயல்களை தொடர்ந்து நடந்து வருகின்றன. காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைப்பதில்லை. அதனால்தான் கஞ்சா, போதை பொருள் கடத்தல் என எங்கு பார்த்தாலும் தலைவிரித்தாடுகிறது.
தி.மு.க. அரசு குற்றங்களை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக நீதிமன்றமே கூறிவிட்டது. இது ஒரு அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சம்மட்டி அடி. அம்மா ஆட்சிக்காலத்தில் எப்படி இருந்த காவல்துறையை இப்படி நீதிமன்றத்தில் கைகட்டி நிற்க வைத்து விட்டார்கள். அதோடு நேர்மையான அதிகாரிகளை பணியில் அமர்த்துவதில்லை.
நாங்கள் காவல்துறையை குற்றம்சாட்டவில்லை. மாறாக காவல்துறையினர் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் பணி செய்ய விடாமல், எதிர்கட்சியினரை பழிவாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதனை நான் சொல்லவில்லை உயர்நீதிமன்றமே சொல்லிவிட்டது.
கேள்வி: வழக்குகள் போடுவோம் என்கிறார்களே?
பதில்: தி.மு.க. தலைவர் கருணாநிதி அம்மா மீது வழக்கு போட்டு பயமுறுத்த வேண்டும். கழகத்தை அழிக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டார். ஆனால் 2001ல் நாங்கள் வெகுண்டு எழுந்துவந்தோம்.
மேலும் அம்மா மீது கருணாநிதி போட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால்தான் அம்மா மன உளைச்சலுக்கு ஆளானார். இத்தகைய சூழ்நிலையில் அம்மாவிற்கு மரணம் ஏற்பட்டது. ஓ.பி.எஸ். லஞ்ச ஒழிப்புத்துறையில் இதனை நியாயப்படுத்தினாரா? என்பது தான் கேள்வி எழுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


















