திருப்பூர்
பல்லடம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் சிறப்பாக வெற்றியை தேடித்தந்துள்ளீர்கள். அதற்கு நெஞ்சார்ந்த நன்றி. மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நூறு சதவீதம் வெற்றியை தேடித்தந்துள்ளார்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் நம் ஆட்சி அமைத்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் திமுக 525 வாக்குறுதிகளை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஒரு வாக்குறுதியும் இன்று வரை நிறைவேற்றவில்லை. ஓட்டளித்த மக்களை ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்.
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கழக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. பல்லடத்தில் கூட போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குறவஞ்சி சாலை திட்டத்திற்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆட்சி மாறி விட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி தற்போது வரை பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. தங்கள் குடும்பத்துக்கு தேவையானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு தார்சாலை இருக்கக்கூடியது தமிழ்நாட்டில் மட்டும் தான். அதுவும் கழக ஆட்சி காலத்தில் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. விபத்து இல்லாத ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டது.
ஆனால் இன்று அந்த ஆட்சியாளர்கள் அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. அவர்களது குடும்பத்தை மட்டுமே சிந்திக்கின்றனர். விசைத்தறி நிறைந்த பகுதியாக பல்லடம் விளங்குகிறது. நூல் விலை உயரவால் கடுமையாக அந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரம் நடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பலமுறை கூறியும் தற்போது வரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழு அமைப்பதற்கே 15 மாத காலம் ஓடிவிட்டது. எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்பதற்காகவே குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகள் அளித்தார்கள்.
பெண்களுக்கான ஊக்கத்தொகை வழங்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியமும் வழங்கவில்லை. அனைத்தும் பொய்யான வாக்குறுதியை இந்த அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று பெட்ரோல் விலை குறைப்பதற்கு பலமுறை சட்டமன்றத்தில் பேசப்பட்டது.அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.
மத்திய அரசாங்கம் பெட்ரோல் விலை குறைத்துள்ளது. பிற மாநிலத்தில் உள்ள அரசாங்கங்கள் பெட்ரோல் விலையை குறைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை ஒன்றுமே செய்யவில்லை. அதற்கு பதிலாக சொத்து வரி, மின்சார கட்டண உயர்வு செய்து பொதுமக்களை நெருக்கடிக்கு தள்ளுகிறார்.
சிந்திக்க தெரியாத முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். பொதுமக்களிடம் பொய்களை கூறி விட்டு ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆகி மாதாமாதம் கமிஷன் பெற்று வருகிறது தி.மு.க ஆட்சி. அதனால் தான் நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதாடாமல் தீர்ப்பு ஆன்லைன் சூதாட்டத்திற்கு சாதகமாக அமைந்தது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.


















