சேலம்,
சேலத்தில் பெய்த கன மழை காரணமாக இரு வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேயர், எம்.பியை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
சேலம் மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. அதில் ஏற்காடு பகுதியில் 58 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பொழிவு இருந்தது. இந்த நிலையில் சேலம் நகரில் இருந்து கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லக்கூடிய மலைப்பாதையில் 60 அடி பாலத்தில் இருந்து 16வது கொண்டை ஊசி வளைவு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய அளவிலான பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, மலைப்பாதையில் சரிந்து கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்காடு பகுதியில் பெய்த கன மழையால் நகருக்குள் செல்லக்கூடிய திருமணிமுத்தாறு கிளை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் ஓடையில் சென்ற மழைநீர் அதிகாலை 3 மணி அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் விடிய விடிய தத்தளித்தனர். வீட்டில் தனியாக இருந்த 78 வயது மூதாட்டி ருக்குமணி என்பவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும், மாநகராட்சி அலுவலகத்துக்கும் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் மாறி மாறி அலைக்கழித்துள்ளனர்.
காலை 6 மணி அளவில் தான் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும், மாநகராட்சி அலுவலர்களும் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அதன்பிறகே மீட்பு பணி நடைபெற்றது. இருந்தாலும் சாலைகள் மற்றும் வீடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.
இதேபோல் சாமிநாதபுரம் டாக்டர் ரத்தினம் தெருவில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி பழனியம்மாள் என்பவர் மழை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இரு வேறு இடங்களில் இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தீபன் மற்றும் மேயர் இராமசந்திரன் ஆகியோர் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்தனர். அப்போது பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு அதிகாரிகள் எந்த உதவிக்கும் வரவில்லை மற்றும் ஓடை முறையாக தூர் வாரவில்லை எனக்கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கார்கள் என 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மழை நீரில் மூழ்கியதால், அவை அனைத்தும் மீண்டும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருமணிமுத்தாறு கிளை ஓடையை முறையாக தூர்வாரி இருந்தால் தடையில்லாமல் மழைநீர் சென்று இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழைநீர் போக்கிடம் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


















