மதுரை
கழக ஆட்சியில் நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது தி.மு.க. ஆட்சியில் பின்னடைவை சந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய கழகத்ம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜா தலைமை வகித்ிதார். மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது:-
அம்மா ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மையில் இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் இருந்தது. தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அம்மா ஆட்சிக் காலத்தில் காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து 50 ஆண்டு கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது.
காவேரி குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ .1,132 கோடி செலவில் 5,586 ஏரி, குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன. இதன் மூலம் நீர் ஆதாரம் தமிழகத்தில் பெருகின. ஆகவே குடிமராமத்து திட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கழக ஆட்சியில் காவேரி டெல்டா பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. 2021-ம் ஆண்டில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் தனராஜன், வெற்றிவேல், மற்றும் ராமகிருஷ்ணன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், மகேந்திர பாண்டி, திருப்பதி, பூமா ராஜா, பண்பாளன், ரகு, தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.











