ராமநாதபுரம்,
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்காத இலங்கை அரசை கண்டித்து ரமேஸ்வரத்தில் 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை கடலோர காவல் படையினரால் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பலகட்ட போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் இந்த 69 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு காலம் தாழ்த்தி வருவதால் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர் சங்க கூட்டமைப்பு மூலம் ராமேஸ்வரத்தில் வருகிற ஜனவரி 1-ந்தேதி ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















