சென்னை
அரசியல் ரீதியாக கழகத்தை சந்திக்க திராணியற்றவர் ஸ்டாலின். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கழகத்தினர் மீது தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுவது, ரெய்டு நடத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மாதந்தோறும் 1000 ரூபாய் குடும்ப அட்டைக்கு வழங்குவதாக சொன்னார்கள். இதுவரை வழங்கவில்லை. அதுபோல சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் மாதம் தோறும் வழங்குவதாக சொன்னார்கள்.
அதனையும் வழங்கவில்லை. இளைஞர்களுக்கு கல்விக்கடன் ரத்து என்று சொன்னார்கள். இதுவரை வாய் திறக்கவே இல்லை. தேர்தல் சமயத்தில் சொன்னதோடு சரி. தி.மு.க அரசு பொறுப்பு ஏற்றவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். இதுவும் இதுவரை நடைபெறவில்லை.
முதியோர்களுக்கு பென்ஷன் தொகையை உயர்த்தி தருவோம் என்றார்கள். அதுவும் உயர்த்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதுவும் வழங்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னார்கள். பெட்ரோலுக்கு மட்டும் சிறிது விலையை குறைத்து விட்டு, டீசலுக்கு விலை குறைக்கவில்லை.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் குறைத்துள்ளது. தமிழகம் மட்டும் குறைக்கவில்லை. இது அறிவிப்பு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். விலை குறைப்பு இல்லாத காரணத்தினால் விலைவாசி ஏறிகொண்டே செல்கிறது. பக்கத்து மாநிலம் எல்லாம் விலையை குறைத்துள்ளது. தமிழகத்தில் குறைக்கவில்லை.
கனமழை பெய்த போது தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் சரியான முறையில் தூர்வாராத காரணத்தினாலே எல்லா வீதிகளிலும் தண்ணீர் தேங்கி பல நாட்கள் மக்கள் அவதிப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை நீர் தேங்கியது. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை. உணவு கிடைக்கவில்லை. தண்ணீர் கிடைக்கவில்லை. மருத்துவ வசதி கிடைக்கவில்லை.
எதுவுமே செய்யாத அரசு தி.மு.க அரசு. இதனை எல்லாம் மறைப்பதற்குத்தான் இந்த ரெய்டு. திசை திருப்பதற்காக இந்த ரெய்டு. நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு அரசியல் ரீதியாக கழகத்தை சந்திக்க முடியாத திராணியற்ற ஸ்டாலின் கழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்கள் வழக்கு போட்டு நிலுவையில் உள்ளது.
அதனை எடுத்து இவர்கள் நடத்தவில்லை. பல முன்னாள் அமைச்சர்களும் நீதிமன்றத்திற்கு சென்று ஸ்குவாஸ் பெட்டிஷன் போட்டு வருகிறார்கள். கழகத்தை பொறுத்தவரை எந்த கொம்பானாலும் அசைக்க முடியாது.
எந்த வழக்குகள் தொடர்ந்தாலும் அதை சட்ட ரீதியாக கழகம் சந்திக்கும். இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


















