சென்னை
இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
இலங்கை கடற்படையினரால் இரண்டு சம்பவங்களில் 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கடந்த 18-ந் தேதி ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 570 படகுகளில் 3000 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அன்று நள்ளிரவில் கச்சத்தீவு அருகில் 6 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 43 மீனவர்களை, தங்கள் கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து,
அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்றுள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில், 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு,படகுகளுடன் தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இலங்கை கடற்படையினர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது மீனவ மக்கள் மத்தியில் மிகப்பெரிய
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, 55 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


















