சென்னை
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று (15ம்தேதி) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி,
மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்
பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு
அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இன்று முதல் 21-ந்தேதி வரை ஏழு நாட்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகம், தி.நகர் பகுதி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (15-ந்தேதி) மாலை 6 மணி அளவில் வடபழனி முருகன் கோவில் அருகில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், கழக அமைப்பு செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்ற வருகை தரும் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கழகத்தினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


















