கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
தற்போது இந்த ஆட்சி மக்களுக்கு போனஸ் அளித்துள்ளது. மின்சாரத்தில் போனஸ் அளித்துள்ளது. மிகப்பெரிய போனஸ் அளித்துள்ளார். வருடத்திற்கு 15 ஆயிரம் வருவாய் வரும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.
12 சதவீதத்திலிருந்து 52 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 6 சதவீதத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று அதற்கும் அனுமதி அளித்து விட்டார்கள். மூன்று ஆண்டுகள் கழித்து 2026 ல் 52 மின் கட்டணம் உயர்ந்து விடும். அதுமட்டுமல்லாமல் சொத்துவரியை உயர்த்தி விட்டார்கள்.
கடைகளுக்கு 150 சதவீதத்தை உயர்த்தி விட்டார்கள். மக்களிடத்திலிருந்து இந்த அரசு சுரண்டுகிறது. ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா தொற்று இருந்த இரண்டு வருடத்தில் வேலைவாய்ப்பு கிடையாது. வருவாய் இல்லை.
கடையில் வியாபாரம் இல்லை. மக்கள் நொந்துபோய் வாழ வழியில்லாமல் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளார்கள். சொத்துவரி என்ற சுமை. மின் கட்டணம் என்ற சுமை. விரையில் பஸ் கட்டண சுமையும் வரப்போகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படி சொத்து வரி போனஸ், மின் கட்டண போனஸ் எல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
மக்களைப்பற்றி கவலைப்படாத ஒரு முதலமைச்சர் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசும் போது ஒன்றை சொன்னார். எடப்பாடி பழனிசாமிக்கு அவருடைய எம்.எல்.ஏவே அடையாளம் தெரியாது என்று சொன்னார்.
எனக்கு அனைத்து எம்.எல்.ஏவையும் அடையாளம் தெரியும். உங்களைப்போல பக்கத்தில் யாரும் வரக்கூடாது. தூரமாக சென்று நிற்க வேண்டும். என்னை இப்போது கூட்டத்தில் நசுக்கி எடுத்து விட்டார்கள். அவரை (ஸ்டாலினை) எங்காவது கூட்டத்தில் விட்டால் போதும். ஒரு நசுக்கு நசுக்கினால் போதும். இந்த கூட்டத்திலே இப்போது இருக்கும் முதலமைச்சர் நடந்து சென்றாலே வெற்றி தான் அவருக்கு.
எனக்கு அனைத்து எம்எல்ஏவையும் நன்றாக தெரியும். நான் முதலமைச்சராக இருக்கும் போதும் சரி, இப்போதும் சரி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியை குறிப்பிட்டு பெயரை உச்சரிக்க முடியும். உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் இருக்கிறார்கள். தொகுதியை குறிப்பிட்டு பெயரைச்சொல்ல முடியுமா. சவால் விடுகிறேன்.
படிக்காமல், பேப்பரை பார்க்காமல் சொல்ல வேண்டும். பேப்பரை பார்த்து படிக்கக்கூடாது. நீங்கள் எங்களைப்பற்றி கேலி கிண்டல் பேசுகிறீர்கள். நான் இந்த கட்சிக்கு டெம்பர் வரியாம். நான் டெம்பரவரி இல்லை. தி.மு.கவில் செயல் தலைவராக இருந்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான். இதுவரையில் திமுகவில் செயல் தலைவரே கிடையாது.
கருணாநிதி உடல் நலமில்லாமல் இருந்த போதும் சரி, பேச முடியாமல் இருந்த போதும் கூட கட்சி தலைவர் பதவியை மகனுக்கு கூட தரவில்லை ஸ்டாலினுக்கு கொடுத்தாரா? படுத்த படுக்கையில் இருந்தபோது கூட ஸ்டாலினை கருணாநிதி நம்பவில்லை. ஆகவே தான் செயல் தலைவர் பதவியை தந்தார்கள்.
ஆனால் அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக முடியும். உயர்ந்த பதவிக்கு வர முடியும். இது அதிமுவில் மட்டும் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது. ஜனநாயகமான கட்சி அதிமுக மட்டும் தான். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். திமுகவில் அதுபோல நடக்குமா?
திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு யார் வேண்டுமானாலும் தலைவராக வர முடியும் என்று ஸ்டாலினால் கூற முடியுமா? அ.தி.மு.க பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் தோற்றுவித்த கட்சி. புரட்சித்தலைவி அம்மா வளர்த்த கட்சி. மீண்டும் ஆட்சி அமைப்போம். கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகள் ஆக்கிய கட்சி அ.தி.மு.க.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.


















