சேலம்,
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி :- கனிமொழி விமர்சனம் செய்துள்ளார், சிஐஏ, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடாத அதிமுக திராவிட கட்சி இல்லை என்று விமர்சனம் செய்துள்ளாரே?
பதில் :- திமுகவினர் எதற்காக போராடி சாதித்து உள்ளார்கள். நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள், உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஊடகங்களிலும் நாங்கள் பார்த்தோம், நீங்களும் வெளிப்படுத்தினீர்கள். தி.மு.க. தேர்தல் நேரத்தில் ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும், இப்பொழுதுள்ள முதலமைச்சர் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் சொன்னார்.
இப்பொழுது உள்ள சட்டமன்ற உறுப்பினர் அவருடைய மகன் உதயநிதியும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். இதுவரைக்கும் என்ன செய்துள்ளார்கள்.
என்ன போராட்டம் நடத்தினார்கள், நாடாளுமன்றத்தில் என்ன குரல் கொடுத்தார்கள். ஆனால் கழகம் காவிரி நீர் பிரச்சினை வருகின்ற பொழுது சுமார் 22 நாட்கள் அவையே முடக்கி விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக நாங்கள் குரல் கொடுத்தோம்.
இன்றைக்கு தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதியை கூட நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்ற காட்சியை தான் நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். தற்போது முதற்கட்டமாக 100 பேர் கழகத்தில் இணைந்துள்ளனர். விரைவில் 10,000 பேர் கழகத்தில் இணையும் விழா நடக்க உள்ளது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.


















