மயிலாடுதுறை,
வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க அரசை சும்மா விட மாட்டோம் என்று மக்கள் கோபத்தில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆவேசமாக பேசினார்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி சின்னக்கடை தெருவில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. நகர கழக அவைத்தலைவர் எஸ்.அலி வரவேற்புரை ஆற்றினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வீ.ராதாகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.சந்தோஷ்குமார், குத்தாலம் பேரூர் கழக செயலாளர் எம்.சி.பாலு, மணல்மேடு பேரூர் கழக செயலாளர் பி.தொல்காப்பியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு நாகை மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் இரா.அன்பழகன், பி.பழனிசாமி, மாவட்ட கழக அவைத்தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட கழக துணைச்செயலாளர் வா.செல்லையன், மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர் ம.சக்தி, மாவட்ட கழக பொருளாளர் என்.செல்லதுரை, மாவட்ட கழக துணைச்செயலாளர் எஸ்.செல்வி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பதினெட்டு மாதம் மட்டுமே ஆட்சியில் இருந்தவர் அண்ணா. அண்ணாவின் பேச்சை கேட்க பலரும் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு பல மணி நேரம் காத்திருந்து அவரது அடுக்குமொழி பேச்சை கேட்டு மகிழ்ந்தவர்கள் ஏராளம். தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா.
அயல்நாட்டவர் வியக்கும் வண்ணம் ஆங்கில வார்த்தையை அள்ளிவீசி பேசி வியக்க வைத்தவர் அண்ணா. அத்தகைய அண்ணாவையே ஏமாற்றியவர் கருணாநிதி. ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் என்னை பாராட்டுங்கள் என்று கூறி தான் வாங்கி வந்த தங்க மோதிரத்தை அண்ணா போட்டது போல் பொதுமக்களுக்கு காட்டி பாராட்டு பெற்றவர் கருணாநிதி.
ஆனால் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறியவர் அண்ணா. இப்போது நடக்கும் விடியா தி.மு.க ஆட்சியை பற்றி வசை படாதவர்களே இல்லை. காரணம் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க அரசை விட மாட்டோம் என்று அனைத்து மக்களும் அதிக கோபமாக உள்ளனர். விடியா திமுக ஆட்சியில் பாருங்கள். மின் கட்டணம் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது தி.மு.க அமைச்சர்களுக்கு தெரியுமா? தெரியாதா? சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால்களுக்கு 6.1/2 (ஆறு அரைசதவீதம்) மின் கட்டணம் உயர்த்தி உள்ள நிலையில் வீடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு 54 சதவீதமாக கட்டணத்தை உயர்த்தியது ஏன்? இதை விட ஒரு கொடுமை பஞ்சாயத்துக்களில் இருக்கும் பணத்தை வைத்து பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் விடியாத தி.மு.க ஆட்சியில் பஞ்சாயத்து பணத்தை காசோலையாக எடுத்து அரசுக்கு எடுத்துச்செல்வது எப்படிப்பட்ட அநியாயம். பின்ன எப்படி கிராமப்பகுதியில் வளர்ச்சி அடையும். விடியா தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கான நிதியை பிடுங்கிவிட்டு நம்ம ஊரு சூப்பர் என்று ஊருக்கு ஊர் விளம்பர பலகை வைத்துள்ளனர்.
கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியினர் தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து வாய் திறக்காதது ஏன்? ஜாக்டோ ஜியோ என்று ஒரு அமைப்பு இருக்குது. அந்த அமைப்பு தி.மு.க எதை செய்தாலும் பாராட்டுவது ஜாக்டோ ஜியோவின் வேலை ஆகும். ஆனா இப்ப அவங்களே கோபமாக இருக்கிறார்கள்.
இப்ப அனைவரது எதிர்பார்ப்பு என்ன தெரியுமா நாடாளுமன்ற தேர்தல் வரட்டும் எங்கள் வேலையை காட்டுகிறோம் என்று அனைவரும் தயாராக இருக்கிறார்கள். விடியா தி.மு.கவின் பாரம்பரிய அரசியலை உடைத்து காட்டுவோம் என்று ஒரே முடிவோடு இருக்கிறார்கள். வரப்போகும் எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவது அண்ணா தி.மு.க. தான் என்று செயல்பட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.


















