கன்னியாகுமரி
அமைச்சரின் தூண்டுதலால் மக்களை அச்சுறுத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டிற்குள்ளாக உறிஞ்சு குழாய் அமைத்து விட வேண்டும் என பொது மக்களுக்கு விரோதமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அமைச்சரின் பேச்சைக்கேட்டு மாவட்ட நிர்வாகம் எந்தவித அரசு ஆணையும் இல்லாமல் இதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழாகுடி தேரூர் கொட்டாரம், அஞ்சுகிராமம் மருங்கூர் சுசீந்திரம் அகஸ்தீஸ்வரம் புத்தளம் அழகப்பபுரம் ஆரல்வாய்மொழி மயிலாடி தென்தாமரை குளம் கன்னியாகுமரி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழக்குடி, தேரூர், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆரல்வாய்மொழியில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மகாதேவன்பிள்ளை, வள்ளியம்மாள்கிருஷ்ணன், ஜோசப், ஏசுமணி, சுடலையாண்டிபிள்ளை, பாலமுருகன், தேவி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாவட்ட நிர்வாகத்தின் ஆணைக்கிணங்க பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் வீடுகளில் கழிவுநீர் உறிஞ்சு குழாயை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பேரூராட்சி நிர்வாகம் சொல்கிறபடி ஒரு வீட்டில் இதுபோன்ற திட்டத்தை நிறைவேற்றி பராமரிக்க வேண்டும்.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். மேலும் பெரும்பாலான பேரூராட்சி பகுதிகளில் ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற வீடுகள் சிறிய அளவில் தான் இருக்கும் மேலும் அனைத்து வீடுகளும் நெருக்கமாகவே காணப்படும்.
இந்நிலையில் அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பது போல் எவ்வாறு கழிவு நீர் உறிஞ்சு குழாய் அமைக்க முடியும். ஆரல்வாய்மொழி தாழக்குடி பூதப்பாண்டி போன்ற பெரும்பாலான பேரூராட்சிகளை சுற்றி ஏராளமான நீர் நிலைகளும் குளங்களும் உள்ள நிலையில் இப்பகுதியில் சில அடி தோண்டினாலே ஊற்று எடுக்க ஆரம்பித்து விடும்.
இந்நிலையில் வீடுகளில் உறிஞ்சு குழாய் அமைக்க தோண்டும்போது தண்ணீர் பெருமளவில் ஊற்றெடுத்து விடுவதால் இப்பகுதிகளில் நீர் உறிஞ்சி குழாய் அமைப்பது சாத்தியமற்றதாகும்.
இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகின்ற ஒரு சூழ்நிலை தான் உருவாகும். எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இந்தத் திட்டத்தினை கைவிட வேண்டும்.
அமைச்சரின் பேச்சைக்கேட்டு விட்டு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை கஷ்டப்படுத்தும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. பிற மாவட்டங்களில் இதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இது போன்ற நிலையை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பாலகிருஷ்ணன், சுந்தரம்பிள்ளை சிவசங்கரன், முருகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.


















