அம்பத்தூர்
விடியா அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மத்திய மாவட்டம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரவாயலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில் கிழக்கு பகுதி செயலாளர் ஏ.தேவதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அம்மா பேரவை துனை செயலாளர் சி.பி.மூவேந்தன், தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திரன், குழந்தைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஏ.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசியதாவது:-
பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த திமுக பதவி ஏற்ற காலம் முதல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. விடியா அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து கொல்லைப்புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. சொத்து வரி, குடிநீர் வரியை தொடர்ந்து தற்போது மின் கட்டணத்தையும் விடியா அரசு உயர்த்தி உள்ளது.
கழக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப், மகளிர் சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை விடியா அரசு முடக்கி உள்ளது. தமிழக மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து உள்ள இந்த விடியா அரசை வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பும் வகையில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார்.


















