கோவை,
நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை மறுக்க முடியாமா என்று கேள்வி எழுப்பி உள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பச்சைபொய் சொல்கிறார் என்று ஆவேசமாக கூறி உள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
இன்றைக்கு விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு வந்துவிட்டு சென்றுள்ளார் என்று கேள்விப்பட்டேன். சென்ற வாரம் வந்துள்ளார். நாட்டு மக்களுக்கே அடையாளம் தெரியாத ஒரு முதலமைச்சர்.
நாம் ஏதாவது ஒன்றைத தெரிவித்தால் அதற்கு நேர் எதிர்மறையாக ஒரு கருத்தை தெரிவிப்பார். எதிர்க்கட்சியை பொறுத்தவரையில் நாட்டு மக்களுக்கு என்ன தேவை, அவர்களின் பிரசசினை என்ன, அந்த பிரச்சினையை இந்த விடியா அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதற்கு பதில் சொல்ல, திராணி தெம்பு இல்லாத ஒரு முதல்வர் ஸ்டாலின்.
சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விட்டுள்ளார். நீட் தேர்வு தி.மு.க மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. மத்தியில் 2010ல் காங்கிரஸ் ஆட்சி. அதில் திமுக அங்கம் வகித்தது. அதில் திமுகவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் காந்திசெல்வன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.
அவர் இருக்கும் போது தான் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அப்படி வெளியிட்டு, கொண்டு வந்து விட்டு இப்போது கழகம் ஆட்சியிலிருந்த போது தான் கொண்டு வந்தார்கள் என்று பச்சைப்பொய் சொல்கின்ற அமைச்சர் இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர்.
உண்மையிலேயே நேர்மை இருந்தால், மனசாட்சி இருந்தால் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு பொய் பேசுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு கடைசி வரை போராடியது கழகம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொள்ளாச்சியிலிருந்து தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பேசினார். அவரது மகன் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்.
ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆகிவிட்டது. என்ன செய்து வருகிறீர்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆச்சு என்று மக்கள் கேட்கிறார்கள். ஸ்டாலினே உங்கள் அமைச்சரை வைத்து பொய்யான செய்தியை மக்களிடத்தில் பரப்ப வேண்டாம். உண்மை நிலை மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.
தமிழகம் விஞ்ஞான உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அதனை மறந்து முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. மறுக்க முடியுமா. அதனை தடுப்பதற்கு அம்மாவின் அரசு, கழகமும் இறுதிவரை போராடியது. இதுதான் உண்மை.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
















