சென்னை
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியது.
இதில் கழகத்தின் சார்பில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்பு செயலாளரும், ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.எச்.பி.மனோஜ் பாண்டியன், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.எம்.பாபுமுருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெறவுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கு துணை ராணுவ படையினரை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். கொரோனா தடுப்புக்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம்.
வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. கோவை மாநகராட்சி, நகராட்சி, சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் பீட்டர் காலனியில் வாக்காளர் பட்டியல் இன்னும் அப்படியே உள்ளது என்ற ஆதாரத்தோடு தேர்தல் ஆணையரிடம்
அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறோம்.
அதாவது ஒரு வார்டில் உள்ள வாக்காளர் பட்டியலை இன்னொரு வார்டுக்கு எதிர்பாராமல் மாற்றி உள்ளார்கள். இதனை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். கொரோனா வழிமுறைகளை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வாறு தேர்தல் நடத்தப்படும் என்று விளக்கம் கேட்டுள்ளோம். இதற்கு பதில் அளிப்பதாக
தெரிவித்துள்ளார்கள். 10 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என்றால் அதற்கு பிறகு வேட்பாளர் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு வீட்டிற்கு செல்ல முடியும் என்ற விளக்கத்தையும் கேட்டுள்ளோம்.
குறிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். மொத்தத்தில் துணை ராணுவத்தினர் நேரடி கண்காணிப்பில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வேட்புமனு அளிக்கும் போது எத்தனை பக்கங்கள் வேட்பு மனுக்கள்
கொடுக்கப்படுகிறது என்பதை தேர்தல் அதிகாரி சான்று அளித்து வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
அதனை அவர்கள் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அப்படி வரும் போது 13 பக்கத்திற்கும் சான்று அளித்து அளிப்பார்கள். மேலும் சிசிடிவி கேமராவிலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
இவ்வாறு முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.
















