கோவை
கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என முதன்மையாக திகழ்கிறார் ஸ்டாலின் என்றும் லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி முன்னிலையில் கோவை சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய எழுச்சி உரை வருமாறு:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இதுவரை மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
ஆனால் ஸ்டாலின் இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று சொல்கிறார். எதில் அவர் சூப்பர் முதலமைச்சர்?
லஞ்சம் வாங்குவதில் தான் சூப்பர் முதலமைச்சராக துல்லியமாக செயல்படுகிறார். கமிஷன், கலெக்சன் கரப்ஷன் என முதன்மையாக ஸ்டாலின் திகழ்கிறார். இதில் மாற்று கருத்து இல்லை.
15 மாத கால திமுக ஆட்சியில், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்களே தவிர எந்த புது திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஏதாவது திட்டங்களை துவக்கி வைத்தார்களா?
தி.மு.க ஆட்சியில் தமிழக மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? ஏதாவது திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்களா? ஒன்றுமே இல்லை. அ.தி.மு.க ஆட்சியில் அருமையான சாலைகள், கூட்டுக்குடிநீர் திட்டங்களால் குடிநீர் வசதிகள், கல்லூரிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அதற்கும் மேலாக ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற கேரள முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து குழுவை அமைத்தது. தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கேரள மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளும் குழு அமைத்து மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிலுவையில் நின்றது.
இப்போது 15 மாத தி.மு.க. ஆட்சியில் இத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது கேரளா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர் மாநாட்டில் பங்கேற்க சென்ற ஸ்டாலின் கேரளா முதல்வரை சந்தித்து ஆனைமலையாறு நல்லாறு திட்டம் பற்றி பேசினேன் என்றார்.
எந்த பத்திரிக்கையிலும் இதுகுறித்து முழுமையாக செய்திகள் கிடைக்கவில்லை. நீண்ட நெடு நாட்களாக பொதுமக்கள் விவசாயிகள் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற கோரிக்கை வைத்தார்கள். அதை நிறைவேற்ற கழக ஆட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தான் நீர் மேலாண்மை திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தது. மீண்டும் அம்மாவின் அரசு அமையும். ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றுவோம்.
சொகுசு விமானத்தில் வருபவருக்கு ஏஎம், பிஎம் தெரியாது. வியர்வையை சிந்தி இரவு பகல் பாராமல் உழைக்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதைப்பற்றி தெரியும். ஒன்றுமே தெரியாத இவரைப்பற்றி இவரே புகழ்ந்து கொள்கிறார்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
















