மதுரை
தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி பரிசு என்று முன்னாள் தி.மு.க. அமைச்சரின் கணவர் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இதுவே விடியா தி.மு.க. அரசின் செயல்பாடுக்கு சாட்சி என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, ஐப்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர் அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மாத்திரைகள் சரியாக கிடைப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரியை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 223 ஏக்கர் நிலம் ஒதுக்கி, ரூ.21 கோடியில் 60 அடியில் நான்கு வழி சாலைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தார்.
உதயநிதி செங்கலை எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்தனர். உதயநிதி காட்டிய செங்கலை முதல்வர் எடுத்து வந்தாவது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?
மதுரையில் கலைஞர் நூலகத்தை பத்து முறைக்கு மேல் ஆய்வு செய்த முதல்வர், நோய் தீர்க்கும் மருத்துவத்திற்கான மாத்திரைகள் விஷயத்தில் ஆய்வு செய்வாரா? மதுரை மாவட்டத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தான் முதலமைச்சர் திறந்து வருகிறார்.
திமுகவின் சுப்புலெட்சுமி கணவர் ஜெகதீசன் டிவிட்டர் பதிவில், இந்த அரசிலே ஊழல் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி பரிசு என கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க முன்னாள் அமைச்சரின் கணவர் பதிவிட்டு இருப்பதே இந்த அரசின் செயல்பாடுக்கு சாட்சியாக உள்ளது.
அரசு விழாவை கட்சி விழாவை போல நடத்தி அரசு நிர்வாகத்தை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மாநாடு முப்பெரும் விழா என எத்தனை விழா நடத்தினாலும் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பாரா முதல்வர்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.


















