கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கேள்வி
விழுப்புரம்
விடியா ஆட்சியில் சாராயம், கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம்சாட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு, தி.மு.க. ஆட்சிக்கு மதுபான ஆலைகளை மூடுவதாக கூறிய கனிமொழி எங்கே? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது.
இதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்குமார், உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், ஏகாம்பரம், ராமலிங்கம், செண்பகவேல், சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பெருந்திரளான கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு பேசியதாவது:-
விடியா ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சொன்ன வாக்குறுதிகள் மட்டுமில்லாமல் சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா தான். நீட் தேர்வுக்கு விலக்கு பெற ரகசியம் வைத்துள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் எங்கே, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகளை மூடுவதாக கூறிய கனிமொழி எங்கே ?
தற்பொழுது விடியா ஆட்சியில் சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த விடியா அரசு செய்த சாதனை சொத்து வரி, பால் விலை , மின்சார கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது தான்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கழக ஆட்சியில் எடப்பாடியார் சீரிய முறையில் நிர்வாக திறனுடன் சிறப்பாக ஆட்சி செய்தார். எனவே இந்த விடியா அரசுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு பேசினார்.


















