சென்னை,
டெல்லியில் வீட்டுவரி மிக மிகக்குறைவு என்பதை அமைச்சர் கோடிட்டு காட்டவில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
சொத்து வரி உயர்வை திரும்ப பெற மறுத்த தி.மு.க. அரசை கண்டித்து வெளிநடப்பு செய்த பின்னர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் சொத்து வரி குறைவாக இருக்கக்கூடிய நிலையில், அதிகமாக இருக்கக்கூடிய மாநிலங்களை மட்டும் ஒப்பிட்டு, தமிழகத்தில் அதைவிட வரி குறைவு என்று அரசு தெரிவித்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: நீங்கள் குறிப்பிடுவது நுற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. டெல்லி குறித்து அவர் குறிப்பிடவில்லை. மும்பை, கல்கத்தா, நாசிக் போன்ற மாநிலங்களை தான் குறிப்பிட்டார். ஆனால் டெல்லியில் இருக்கின்ற சொத்து வரி குறித்து குறிப்பிடவில்லை.
அங்கு சொத்து வரி மிக, மிக குறைவு. சில விதிமுறைகளை விதித்துள்ளார்கள். சொத்து வரியை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் 15 சதவீதம் குறைத்து கொள்கிறார்கள்.
அதோடு மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 சதவீதம் வீட்டு வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளார்கள். எனவே டெல்லியில் வீட்டு வரி மிக மிகக்குறைவு. அதனை அமைச்சர் கோடிட்டு காட்டவில்லை.
மற்ற நகரத்தைத் தான் குறிப்பிட்டார். தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் போது சொத்து வரியா, சொத்தை பறிக்கின்ற வரியா என்று குறிப்பிட்டவர் இன்றைய தினம் சொத்துவரி விதித்ததை நியாயப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. இது
கண்டிக்கத்தக்கது.
கேள்வி: சொத்துவரியை உயர்த்தவில்லை என்றால் உள்ளாட்சிகளுக்கு நிதி கிடைக்காது என்று அமைச்சர் குறிப்பிடுகிறாரே.
பதில்: அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே 2018-ல் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று உயர்நீதிமன்றமே தெரிவித்தது. அப்போது கூட நாங்கள் குழுவை அமைத்து மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சொத்து வரியை நாங்கள் உயர்த்தவில்லை. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டார்.
எனவே மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய அரசு தான் உண்மையான அரசு. உண்மையான அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டது. இன்றைக்கு மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியிலே சொத்துவரி உயர்த்தியது கண்டனத்திற்குரியது. மக்கள் மீது இந்த அரசு மிகப்பெரிய சுமையை சுமத்தியுள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார்.


















