அம்பத்தூர்
மக்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்து விட்டது தி.மு.க அரசு என்றும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறி உள்ளார்.
கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகளிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் ஆவடி தொகுதிக்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் பெறப்பட்டது.
இதன்பின்னர் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான முனைவர் வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கழகத்தின் அமைப்பு தேர்தல் மிக எழுச்சியாக நடைபெற்று வருகிறது. கழக தொண்டர்கள் சாரை சாரையாக அணி வகுத்து தேர்தலில் போட்டி போடுகின்றனர். திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் ஆட்சி பீடத்தில் ஏற அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற தவறிெவிட்டது.
குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியது தி.மு.க. ஐந்து சவரன் தங்க நகை தள்ளுபடி என்று கூறி மக்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்து விட்டது தி.மு.க அரசு. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இவை அனைத்தையும் அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை கழகம் செய்து வருகிறது. கழகத்தின் மீது மக்கள் அதீத நம்பிக்கையோடு இருக்கிறார்கள் மக்கள். எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
















