சென்னை,
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத்தான் இருக்கும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று பொய்களை அள்ளி வீசினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நீட்தேர்வு ரத்து செய்வது குறித்து அவர் வாயே திறக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், நீட்தேர்வு ரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமரை சந்தித்து பேசுவேன் என்றார்.
அதன்பிறகு பிரதமரை சந்தித்து பேசி விட்டும் வந்து விட்டார். ஆனால் நீட் ேதர்வு ரத்து என்ன ஆச்சு என்று விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கவேயில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் ஆவடி தொகுதி திருமுல்லைவாயில் சோழம்பேடு இளங்கோ நகர் 2வது தெருவை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா. இவர் ஆன்லைன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் பயின்று வந்த நிலையில் கடந்த 17ம்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தேர்வு முடிவு வெளியானது. இதில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி, என்று ஒழியும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். மாணவி லக்ஷனா ஸ்வேதா தமிழகத்தில் மருத்துவம் படிக்க விரும்பி நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
`நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்து விடுவோம்’ என்று வாய் நீளம் காட்டிய இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்கள் நீண்டுகொண்டே இருப்பது கொடுமையிலும் கொடுமை.
இனியும் இந்த விடியா திமுக ஆட்சி, நீட்டை ஒழிக்கும் என்று மக்கள் நம்பத்தயாராக இல்லை. “ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம்’’ என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் துயரத்திற்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது, நீட் தேர்வை ரத்தும் செய்யும் வரை மாணவச்செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, அம்மாவின் ஆட்சியில் தொடங்கிய இலவச பயிற்சி மையங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஒன்றியங்கள் தோறும் பயிற்சி மையங்களை தொடங்கி வைத்து, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச்செல்வங்களுக்கு பயிற்சியையும், அதனுடன் மனப்பயிற்சியையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


















