தூத்துக்குடி,
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க கைப்பற்றியே தீரும் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சூளுரைத்துள்ளார்.
ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதுி சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான என்.தளவாய்சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விரைவில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் ஒன்றரை கோடி தொண்டர்களை கண்ணின் இமை போல் கட்டிக்காத்து வரும் எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க கைப்பற்றும்.
தமிழகத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் தகுந்த மரியாதை செலுத்தும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவர்களுக்கு மணிமண்டபம் மற்றும் திருவுருவ வெண்கல சிலைகளை அமைத்து பெருமை சேர்த்தார்.
அதேபோல் சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் சுதேசிக்கப்பல் விட்ட மாமேதை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் அமைத்து அவருக்கு வெண்கல திருவுருவச்சிலை அமைத்து தந்ததும் அம்மாவின் அரசு தான்.
அதேபோல் சட்டமன்றத்தில் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்ததும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தான். இப்போது தர்மம் வென்றது என்பதற்கேற்ப எடப்பாடியார் தலைமையிலான ஒற்றை தலைமையை நீதிமன்றமே ஏற்று அங்கீகாரம் செய்து தீர்ப்பளித்துள்ளது.
இனிமேல் தமிழகத்தில் தி.மு.க அரசு செய்யும் அனைத்து மோசடிகளையும் மக்கள் மத்தியில் எடப்பாடியார் தலைமையிலான அகழகம் எடுத்து வைக்க ஒருபோதும் தயங்காது.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறினார்.
பேட்டியின் போது கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லஷ்மண பெருமாள், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.


















