சென்னை
கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ரம்ஜான் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகை திருநாளாம் “ரம்ஜான்’’ திருநாளில் எங்கள் உளங்கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறை தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.
அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் எங்கள் அன்புக்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி கொள்கிறோம்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள ரம்ஜான் திருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.


















