தூத்துக்குடி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஆலோசனை வழங்கி பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். கடந்த கழக ஆட்சியில் தை பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரு.2500 வழங்கினார்.
ஆனால் விடியல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு பொங்கலுக்கு பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைவது உறுதி.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசினார்.
இக்கூட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், எட்டையாபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமான்,அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் செண்பக மூர்த்தி, மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் இந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் போடு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
















