கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை
சென்னை,
தொண்டர்களின் நல்வாழ்த்துகளோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன். தலைமைக்கழகத்திற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் அனைவரும் எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல், வளமுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’’ என்னும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை தொடங்கி, மகத்தான மக்கள் பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்தார். தொடர்ந்து, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தீயசக்தி தி.மு.க.வால் கொடுக்கப்பட்ட பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் தகர்த்தெறிந்து, சாதனைகளாக்கி மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து மக்கள் சிறப்புடன் வாழ்வதற்கு மகத்தான திட்டங்களை தந்தார்.
அதேபோல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளையும் பெற்று தந்தார். அம்மா அவர்களின் நல்லாசியோடு ஆட்சி பொறுப்பேற்ற நான், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களின் பேராதரவோடு சிறப்பானதொரு நல்லாட்சியை வழங்கினேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கடந்த காலங்களில் பல்வேறு சோதனைகளை சந்தித்து, அவற்றையெல்லாம் வென்றெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பு மிக்க நல்லாட்சிகளை தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக தொண்டர்களின் நல்வாழ்த்துகளோடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறேன்.
கழக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், இன்று தலைமைக்கழகத்திற்கு வருகை தந்தபோது, தலைமை கழக செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி,
பகுதிக் கழக செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், நகர, பேரூராட்சி வார்டு கழக செயலாளர்கள், மாநகராட்சி வட்ட கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் உற்சாகம் பொங்க வரவேற்று, வாழ்த்து தெரிவித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


















