மதுரை
சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது பாதுகாக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த சரவண பாலகுருசாமி, வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ், தங்கபாண்டி ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் தரப்பில் தான் லஞ்சம் தரவில்லை என்பதால் அழகர்சாமி மற்றும் நாகராஜன் இருவரிடமும் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனது செல்போனை பறிமுதல் செய்து, சட்டவிரோத காவலில் காவல்துறையினர் வைத்திருந்ததாகவும், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், காவல்நிலைய சி.சி.டி.வி. பதிவுகள் 30 நாட்களுக்கு மேலாக தானே அழியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதால், தற்போது அதனை ஆராய முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்படுவதை தமிழக உள்துறை செயலரும், தமிழக காவல்துறை தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
உத்தரவு நகல் கிடைக்க பெற்ற 3 மாதங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
















