நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் மாவட்ட கழக செயலாளர் புகார்
வேலூர்,
வேலூர் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காலை உடைத்தனர். இந்த அராஜக செயலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருவலம் பேரூராட்சி குப்பத்தா மோட்டூர் ஊராட்சியில் கழகத்தை சேர்ந்த சோனியா என்பவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், ஜெ.சதீஷ்குமார் என்பவர் துணைத்தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில் ஊராட்சிக்கு சொந்தமான அரசு கட்டடத்தை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் நந்திவர்மன், தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கணவர் கிருபாகரன் ஆகியோர் இடித்து அபகரிக்க முயற்சி செய்தனர்.
இதை தட்டிக்கேட்ட கழக ஊராட்சி மன்ற தலைவர் சோனியா, கழக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெ.சதீஷ்குமார், வேலூர் மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் திருமால்
ஆகியோரை தி.மு.க. குண்டர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டனர்.
இது தொடர்பாக கழக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் திருவலம் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரு தரப்பினரையும் விசாரிப்பதற்காக போலீசார் திருவலம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் நந்திவர்மன், தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரின் கணவர் கிருபாகரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க. குண்டர்கள் காவல் நிலையத்தில் புகுந்து போலீசார் முன்பே கழக ஊராட்சி மன்ற தலைவர் சோனியா, துணைத்தலைவர் ஜெ.சதீஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் திருமால் ஆகியோரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கினர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத தி.மு.க.வினர் காவல் நிலையத்தில் இருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெ.சதீஷ்குமார் மீது போட்டு அவரது காலை உடைத்தனர். நடைபெறுவது எங்கள் ஆட்சி, எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
நீங்கள் புகார் அளித்தாலும் அமைச்சரிடம் சொல்லி புகார் மனுவை தூக்கி எறிந்து விடுவோம். ஆகவே எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. காவல்துறை அதிகாரிகள் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அமைச்சரிடம் சொல்லி அவரை இடமாற்றம் செய்து விடுவோம் என்று சொல்லி காவல் நிலையத்திற்கு உள்ளே காவல்துறை அதிகாரிகள் முன்பு தி.மு.க.வினர் கழக நிர்வாகிகளை தாக்கினர்.
இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கழகத்தினர் உதவியுடன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சதீஷ்குமார் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் நிலையத்தில் புகுந்து தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுவதை அங்கிருந்த போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை தாக்கிய தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் நந்திவர்மன், தி.மு.க.வை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாவட்ட கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட கழக பொருளாளர் எம்.மூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலச்சந்தர், வழக்கறிஞர் எ.எ.தாஸ், ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்சங்கர், நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினரின் தொடர் அராஜகத்தால் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் நிலையத்திற்கு உள்ளேயே தி.மு.க.வினர் நுழைந்து அடிதடியில் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குத்து, வெட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் பெருகி விட்டன. காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற தவறி விட்டார் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


















