தருமபுரி
கழக அமைப்பு தேர்தல் இயக்கத்திற்கு அஸ்திவாரம் என்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகியோர் கூறினர்.
கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்பங்கள் மற்றும் பதிவேடுகளை வழங்கி பேசியதாவது:-
கழக அமைப்பு தேர்தல் என்பது இயக்கத்திற்கு அஸ்திவாரம் போல. அப்படி கிளை கழகங்கள் அமைந்ததால் தான் கழகம் வீறு கொண்டு நிற்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மறைவிற்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
தலைமை இல்லை என்ற சூழ்நிலையில் கூட அடிமட்ட தொண்டன் கூட மாற்றுக் கட்சிக்கு செல்லாத ஒரு இயக்கம் கழகம் ஆகும். அடுத்து வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலில் அம்மாவின் அரசு எடப்பாடியார் தலைமையில் நிச்சயம் அமையும். அதற்கு இந்த அமைப்பு தேர்தல் அடித்தளம். இதனை மனதில் வைத்து சிறப்பாக நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டை. இடைத்தேர்தலிலும் சரி, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் சரி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


















