திண்டுக்கல்:-
தி.மு.க.வின் கைக்கூலிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். இனி கழக ஆட்சி அமைவதில் எந்த தடைக்கல்லும் இல்லை. எனவே எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைது உறுதி என்று கழக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம இரா.விசுவநாதன் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதி பழனியில் நடைபெற்றது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். பழனி ஒன்றிய கழக செயலாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, கொடைக்கானல் நகர கழக செயலாளர் எம்.ஸ்ரீதர், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை, பாலசமுத்திரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் வி.மருதராஜ், மாநில கழக அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் கோவை ராஜ்சத்யன், தலைமை கழக பேச்சாளர்கள் இளமுருகன், கருப்புசாமி, நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.என்.வேணுகோபால், மாவட்ட கழக துணை செயலாளர் சந்திரா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசியதாவது:-
தமிழ்மொழியை காக்கும் வகையில் இருமொழி கொள்கையை வலுப்படுத்தியதுடன் புரட்சி கருத்துகளின் மூலம் மக்கள் மனதில் வாழ்பவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அண்ணா வழிவந்த கட்சி என கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.கவை உருவாக்கியது கருணாநிதி என வரலாற்றை திரித்து கூறுகிறார்.
பொய்களை மட்டுமே பேசி வரும் தி.மு.க அரசுக்கு சிம்ம சொப்பனமாகவும், ஆளுமை மிக்க தலைவராகவும் எடப்பாடி கே.பழனிசாமி விளங்குகிறார். எனவே, அவரை விரைவில் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க போகிறோம்.
கழகத்தில் இருந்து கொண்டு தி.மு.க.வின் கைக்கூலியாக இருந்த பலரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். எனவே, இனி கழக ஆட்சி அமைப்பதில் எவ்வித தடைக்கல்லும் இல்லை. தற்போது ஆட்சி செய்யும் தி.மு.க. தலைமையிலான அரசு தேர்தலின் போது சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததுடன் அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி விட்டது. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அம்மாவின் வழியில் நின்று எடப்பாடியார் செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை புரிந்தார்.
தற்போதைய திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதோடு தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். எனவே, வருகிற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.


















