கடலூர்
உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார் என்று கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார்.
கடலூர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக பொன்விழா நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசியதாவது,
புரட்சித் தலைவர், அம்மா ஆகியோர் எனக்கு பின்னால் யார் தலைவர் என்று நமக்கு யாரையும் அடையாளம் காட்டவில்லை. கழகத் தொண்டர்கள்தான் தான் நமக்கு தலைவர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இங்கே இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த கட்சிக்கு எந்த பொறுப்பிற்கு வேண்டுமானாலும் வரலாம். இது இந்தியாவிலேயே நமது கழகத்தில் மட்டும் தான்.
வேறு எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் திமுகவில் கருணாநிதி, அவருக்கு பின் ஸ்டாலின் அவருக்கு பின் உதயநிதி என அது குடும்பக் கட்சியாக உள்ளது. எடப்பாடி யார் மிகப்பெரிய அசைக்கு முடியாத தலைவராக வந்து விட்டார். இது காலத்தின் கட்டாயம். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர ஒ.பி.எஸ். கழகத்தில் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்த ஒருவர் இன்று கழக அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார்.
திமுகவுடன் சேர்ந்து கொண்டு கூட்டு களவாணித்தனம் செய்கின்றார். உடனிருந்து கொல்லும் விஷமாக ஓபிஎஸ் இதுவரை நம்முடன் இருந்துள்ளார். கழகம் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் ஜெயித்த வரலாறுகள் பல உண்டு. ஆனால் திமுக எந்த ஒரு காலத்திலும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடதாக் வரலாறு கிடையாது.
சட்டப்பேரவையின் மாண்பு தெரியாத சபாநாயகர் இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எந்த பிரச்சனையும் தீர்க்க ஸ்டாலின் தயாராக இல்லை. 2011 தேர்தலில் அம்மா நான் ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் வழங்குவேன், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்குவேன், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
வென்றார், உடனடியாக அந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினார். ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதி எதை நிறைவேற்றி இருக்கின்றது. உரிமைத்தொகை 1000 ரூபாய் மாதம் தருவேன் என்று சொன்னார்களே, அதை கொடுத்தார்களா. மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.
வீட்டு வரி உயர்த்தி விட்டார்கள். சொத்து வரி உயர்த்தி விட்டார்கள். ஆவின் பால் கூட விலை உயர்த்தி விட்டார்கள். டாஸ்மாக் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கை மூடுவேன் என்று சொன்னார்களே அதை மூடினார்களா? சொன்ன எந்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றினார்.
முதியோர் உதவித் தொகையையும் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் உயர்த்தி தருவேன் என்று சொன்னாரே செய்தாரா. எடப்பாடியார் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தார் .அதிலே பதினோரு லட்சம் பேருக்கு ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டது இந்த கையாலாகாத ஸ்டாலின் அரசு. இதையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் பேசுகின்றனவா.
கடந்த 10 ஆண்டு காலத்தில் எங்களால் தர முடிந்த திட்டங்களை எல்லாம் ஏன் நிறுத்தி வைத்துள்ளீர்கள். 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டில் இருந்து நாங்கள் இறங்கிய போது எங்களால் செயல்படுத்த முடிந்த, எங்களால் கொடுக்க முடிந்த திட்டங்களை நீங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஏன் நிறைவேற்ற முடியவில்லை. என்ன காரணம் திறமை இல்லை. நிர்வாகத் திறமை கொஞ்சம் கூட இல்லை.
ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் மக்கள் நலத்திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணம் இருக்க வேண்டும். எங்களிடம் இருந்த அதிகாரிகள் தான் இன்றும் இருக்கின்றார்கள். எங்களிடம் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் உங்களிடம் ஏன் செயல்பட முடியவில்லை. மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காமல் குடும்பத்தை மட்டுமே சிந்தித்தால் எப்படி ஆட்சி நடத்த முடியும்.
எதற்கெடுத்தாலும் கமிஷன் கமிஷன் என்று தான் இந்த ஆட்சி உள்ளது. வயதில் முதிர்ந்த அனுபவம் உள்ள அமைச்சர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பேச்சை எல்லாம் கேட்பதில்லை. எந்த அமைச்சர் அதிக கலெக்க்ஷன் செய்து தருகின்றாரோ அவர் பேச்சை மட்டும் தான் ஸ்டாலின் கேட்கின்றார்.
மின்சார கட்டணத்தை கழக ஆட்சி காலத்தில் உயர்த்தவே இல்லை. ஆனால் வீட்டு வாசல் முன் தட்டி வைத்துக்கொண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது, சொத்து வரி உயர்த்த கூடாது என்று போராட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். இப்பொழுது ஏன் சொத்து வரி மின்சார கட்டணத்தையும் ஸ்டாலின் உயர்த்தி இருக்கின்றார்.
கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக எந்த ஒரு பொருட்களின் விலையும் உயராமல் பார்த்து கொரோனாவையும் சிறப்பாக கையாண்டு கொண்டு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்தார் எடப்பாடியார்.
இதை நாங்கள் சொல்லவில்லை, இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் கொரோனாவை சிறப்பாக கையாண்டது என்று மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
அமைச்சர்களை ஸ்டாலினால் கேள்வி கேட்க முடியவில்லை பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றார் பொதுக்குழுவிலே போய் இவர்களால் அடுத்து என்ன பிரச்சனை வருமோ என்று பயந்து நடுங்குகிறேன் என்று பேசுகிறார்.
இப்படி 18 மாதங்களாக ஆட்சி நடத்திக் கொண்டு சொன்ன எதையும் செய்யாமல், கடந்த ஆட்சியில் செயல்படுத்தி திட்டங்களையும் செய்யாமல் ஒரு கடுமையான மக்கள் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியில் அதையெல்லாம் மறைப்பதற்காக மக்களின் கோபங்களை திசை திருப்புவதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றது.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுகவை மக்கள் விரைவில் தூக்கி எறியும் காலம் வரும். எடப்பாடியார் விரைவில் தமிழகத்தின் முதல்வராக இதை யாராலும் தடுக்க முடியாது என்று மாநில அம்மா பேரவை துணை செயலாளர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் பேசினார்.


















