புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 151 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 பேரும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 49 பேர், ராஜஸ்தானில் 43 பேர், தெலுங்கானாவில் 41 பேர், கர்நாடகாவில் 31 பேர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 19 மாநிலங்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.


















