ஆரியங்காவு,
ஆரியங்காவு தர்மசாஸ்தா கேலயிலில் சுவாமிக்கும் ஸ்ரீபுஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
கேரளா மாநில ஆரியங்காவில் ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கோயில் உள்ளது. இங்கு சவுராஷ்டிரா குல பெண்ணான ஸ்ரீ புஷ்கலா தேவியை தர்மசாஸ்தா மணமுடித்தார். அதனைத்தொடர்ந்து திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் சவுராஷ்ட்ரா இனமக்கள் இணைந்து திருக்கல்யாண வைபவத்தை ஆண்டுதோறும் நான்கு நாட்கள் வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.
இதில் மாம்பழ துறையில் ஜோதி ரூபம், கோட்டைவாசல் ஸ்ரீ கருப்பணசாமிக்கு பொங்கல் படைப்பு, பெண் வீட்டார் சீதனம் கொண்டு வந்து மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், நழுங்கு உற்சவத்துடன் மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அன்னதானம், திருவிளக்கு பூஜை சப்பர புறப்பாடு நடைபெறும். பின்னர் மண்டலாபிஷேகத்துடன்
திருக்கல்யாண நிகழ்ச்சி நிறைவுடையும்.
இந்த ஆண்டு ஸ்ரீதர்ம சாஸ்தா- ஸ்ரீபுஷ்கலா திருமணம் கடந்த 25-ந்தேதி இரவு நடைபெற்றது. இத்திருமணத்தை வேத பாராயணம் முழங்க வேத விற்பன்னர்கள் நடத்தி வைத்தனர். இதில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க நிர்வாகிகள், மாம்பழத்துறை ஸ்ரீ புஷ்கலா தேவி சவுராஷ்டிரா மகாஜன சபை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


















