சென்னை
இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களை பாழாக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மறுக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னை பெருங்குடியில் வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் மனைவி, 2 குழந்தைகளை கொன்று தானும்தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்தால் மனவேதனை அடைந்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் மணிகண்டன் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த தி.மு.க. அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது,
நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


















