மதுரை
அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா அரசு போட்டு விட்டது என்றும், எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யமே மட்டுமே பரிசு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஸ்டாலின் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையை அடுத்த சின்ன சொக்கிகுளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாடு படுதோல்வி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ மாநாடு தோல்வி தான் தற்பொழுது விவாத பொருளாக இருக்கிறது.
அரசு பணியாளர் நடத்தை விதிப்படி ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது மிகப்பெரிய குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு ஆளும் கட்சியை புகழ்ந்து, அதனால் எதையும் சாதிக்க முடியாத சூழலில் மன குமுறலில் உள்ளனர்.
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலவரின் பேச்சில் எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகாததால் முதல்வர் பேசும்போதே கூட்டம் கூட்டமாக அரசு ஊழியர்கள் வெளியேறினர். முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பேசும்போதே கூட்டத்தை விட்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர்.
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நம்பிக்கையை தொலைத்த மாநாடாக அமைந்துள்ளது. அரசு நிர்வாக அங்கமாக உள்ள அரசு ஊழியர்கள் வேதனையில் இருக்கின்றனர். ஜாக்டோ, ஜியோ அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு பட்டை நாமத்தை போட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறிய முதல்வர், மாநாட்டில் வாய் திறந்து பேசுவதற்கு தயாராக இல்லை என்பதை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக கூறிவிட்டு தற்பொழுது ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளனர்.
எங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைக்க முதல்வர் தவறி விட்டார் என அரசு ஊழியர்கள் முன் வைக்கும் கண்டன குரல் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருக்கும். எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யம் மட்டுமே பரிசு என ஜாக்டோ ஜியோ மாநாட்டில் சொல்லாமல் சொல்லி விட்டு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


















