சென்னை,
அம்மாவாக என்னை பார்க்கிறார்கள் என்று சசிகலா ஜோக் அடிக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான நேற்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக்கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி : நேற்று ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து வந்துள்ளார். இனிமேல் தான் எங்களின் செயலை பார்ப்பீர்கள் என்று தெரிவித்துள்ளாரே.
பதில் : யார் வேண்டுமானாலும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்திக்கலாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. பண்ருட்டியார் நான் யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்வாரா. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும். அதனைத்தான் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் ஒற்றை தலைமை என்ற அடிப்படையில் எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் கழகம் வலிமை மிக்க இயக்கமாக இருக்கின்றது. இப்படி இருக்கும் போது யார், யாரை வேண்டுமானால் சந்திக்கட்டும். இதனால் எந்த விளைவுகளும் ஏற்பட போவதில்லை.
கேள்வி :அம்மாவை பார்ப்பது போல மக்கள் என்னை பார்க்கிறார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளாரே.
பதில் : சென்ஸ் ஆப் ஹியூமர் அதிகம். அது மட்டுமில்லாமல் ஒரு ஜோக்கை சிரிக்காமல் சொல்வார். இதனை ஜோக்காகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மடு எங்கே மலை எங்கே. மடுவிற்கும் மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மலை என்பது அம்மா. மடு என்பது யார் என்று தெரியும்.
கேள்வி : அ.தி.மு.க அலுவலக சாவி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து வருகிறாரே.
பதில் : அ.தி.மு.க.வுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.
கேள்வி : சென்னையில் காய்ச்சல் அதிகமாக உள்ளதே.
பதில் : இந்த விடியா அரசில் இரண்டு பேர் விளம்பரத்தில் கெட்டிக்காரர்கள். ஒன்று முதலமைச்சர், மற்றொன்று தினமும் பேட்டி அளிக்கின்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இரண்டு பேருமே பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவதில் மிக மிக கெட்டிக்காரர்கள். ஏன் என்றால் இங்கு விளம்பர அரசியல் தான் நடந்து வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன.
அரசு மருத்துவமனைகளில் ரத்தக்கொதிப்புக்கு மாத்திரை இல்லை. தேவைக்கு மாத்திரை இல்லாத நிலை தான் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஏன் என்றால் தாமதம் ஆகிறது. அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அளிப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இதனால் மக்கள் கஷ்டப்பட வேண்டுமா.
இன்றைக்கு ப்ளு காய்ச்சல் பரவி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்றைக்கு ஒரே நாளில் 100 பேர் அனுமதிப்பட்டுள்ளார்கள். இதனை தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ப்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகள் தமிழகத்தில் அதிலும் சென்னையிலும், புறநகரிலும் இந்த ப்ளு காய்ச்சலால் அதிகமான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் நிதர்சனமாக உண்மை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


















